ரஜினிக்கு நேற்று திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மயிலாப்பூரில் உள்ள இசபெல்லா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
ரஜினிக்கு ஜீரண கோளாறு ஏற்பட்டுள்ளது என்றும் அதன் காரணமாகவே அவர் வாந்தி எடுத்துள்ளார் என்றும் சிகிச்சை அளித்த டாக்டர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார். முதல்வர் கருணாநிதி நேரில் போய் நலம் விசாரித்தார்.
சிகிச்சைக்கு பின் ரஜினி நலமாக இருப்பதாகவும் நாடி துடிப்பு ரத்த அழுத்தம், சுவாசம் போன்றவை சீராக உள்ளதென்றும் அவர் கூறினார். பின்னர் மாலை ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
ரஜினியிடம் ஓய்வெடுக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து ஒரு வாரம் வீட்டில் ஓய்வெடுக்கிறார். இதனால் ராணா படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
ராணா கதாநாயகியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். ரஜினி - தீபிகா சம்பந்தப்பட்ட பாடல் காட்சியொன்று நேற்று படமானது. ஏ.வி.எம். ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடத்த பிரமாண்ட அரங்குகள் அமைத்திருந்தனர்.
ரஜினி ஓய்வெடுப்பதால் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. முன்னதாக ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் பரவியதும் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது. ரசிகர்கள் கவலையோடு மருத்துவமனை முன் திரண்டனர். பல ரசிகர்கள் அவர் டிஸ்சார்ஜ் ஆகும் வரை அங்கேயே காத்திருந்தனர். அவர் டிஸ்சார்ஜ் ஆன பிறகுதான் நிம்மதியானார்கள்.
கேஎஸ் ரவிக்குமார்
ரஜினிக்கு உடல் நலக்குறை ஏற்பட்டதற்கான காரணம் குறித்து ராணா பட இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் கூறும் போது, "ராணா படத்தின் கதை விவாதம் தொடர்ந்து பல நாட்கள் நடந்தது. அதில் ரஜினியும் பங்கேற்றார்.
பட பூஜைக்கு முந்தைய நாள் அவரே ஒவ்வொருத்தருக்கும் போன் செய்து அழைப்பு விடுத்தார். இரவு 12 மணி வரை ஒவ்வொருவராக கூப்பிட்டார். பல நாட்கள் ஓய்வு இல்லாமல் இருந்ததால் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது," என்றார்.
படப்பிடிப்புக்காக விரைவில் லண்டன் செல்வதாகவும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment