Monday, May 2, 2011

தெய்வத்திருமகளாக மாறிய தெய்வத்திருமகன்

 தெய்வத்திருமகளாக மாறிய தெய்வத்திருமகன்விக்ரம் புதிய படத்தின் தலைப்புக்கு எதிராக எழுந்த சர்ச்சையின் விளைவாக 'தெய்வத்திருமகன்' என்ற தலைப்பு 'தெய்வத்திருமகள்' என்று மாற்றப்பட்டுள்ளது.

இயக்குநர் விஜய் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் 'தெய்வத்திருமகன்' படத்தின் தலைப்பு குறித்து பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. பசும்பொன் முத்துராமலிங்க தேவரை "தெய்வத்திருமகன்" என்றும் அழைப்பதால், அதை திரைப்படத்தின் தலைப்பாக பயன்படுத்தக்கூடாது என்ற காரணத்தை முன் வைத்த இந்த அமைப்புகள், இது சம்மந்தமாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் கடிதங்கள் அனுப்பியிருக்கிறார்கள். மேலும் முதலமைச்சரிடமும் இதுதொடர்பாக முறையிட்டுள்ளனர்.

இதனால் இப்படத்தின் தயாரிப்பாளரிடம் பேச்சு வார்த்தை நடத்திய தயாரிப்பாளர்கள் சங்கம் படத்தின் தலைப்பையும் மாற்றியுள்ளது. இது தொடர்பாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தயாரிப்பாளர் மோகன் நடராஜன் ஸ்ரீ ராஜகாளியம்மன் மீடியாஸ் நிறுவனம் சார்பில் விக்ரம் நடிப்பில் இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகி வந்த 'தெய்வத்திருமகன்' படத்தலைப்பு குறித்து பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் நேரிலும், கடிதம் வாயிலாகவும் மற்ற அமைப்பினரும் தங்கள் கருத்தை தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தெரிவித்துள்ளனர். அதில் தமிழக மக்கள் பசும்பொன் உ.முத்துராமலிங்கதேவர் அவர்களை "தெய்வத்திருமகன்" என்று போற்றப்படுவதால், சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் பேசி தலைப்பை மாற்றிகொள்ள ஆவன செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். எனவே, ஸ்ரீதர் வாண்டையார் மற்றும் அமைப்பினரில் நியாயமான உணர்வுகளை புரிந்து கொண்டு ஸ்ரீ ராஜகாளியம்மன் மீடியாஸ் நிறுவன உரிமையாளர் மோகன் நடராஜன் அவர்கள் குறிப்பிட்ட "தெய்வத்திருமகன்" படத்தைப் "தெய்வத்திருமகள்" என்று மாற்றிக்கொள்வதாக கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர். எனவே இத்திரைப்படத்தின் தலைப்பு "தெய்வத்திருமகள்" என்று மாற்றப்பட்டுள்ளது இந்த அறிக்கை தயாரிப்பாளர் மோகன் நடராஜனின் ஒப்புதலோடு தயாரிப்பாளர் சங்கம் வெளியிடுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment