Saturday, June 11, 2011

அவன் இவன் மாதிரி இனி நடிக்க மாட்டேன்: விஷால்!


“அவன் இவன்” படத்திற்காக நான் பெற்ற துன்பங்களை சொல்ல முடியாது. எத்தனை கோடி கொடுத்தாலும் இனிமேல், அதுபோன்ற கேரக்டரில் நடிக்க மாட்டேன் என்று கூறுகிறார் நடிகர் விஷால். டைரக்டர் பாலா இயக்கத்தில், ஆர்யா, விஷால் நடிப்பில் இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கும் படம் “அவன் இவன்”. படத்தில் வித்யாசமான கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கும் விஷால், படம் குறித்தும், தன்னுடைய நடிப்பு அனுபவங்கள் குறித்தும் கூறியதாவது,
“அவன் இவன்” படத்தில் நானும், ஆர்யாவும் நடித்துள்ளனர். கிட்டத்தட்ட 200 நாட்கள் படத்தில் நடித்தேன். அதுவும் ஒரு கண் மாறு கண்ணாக. இப்படி நடித்த போது எனக்கு ஏற்பட்ட துன்பங்களை சொல்ல முடியாது. தினமும் சூட்டிங் முடிந்து இரவு ஹோட்டலில் தங்கும் போது தலை மற்றும் கண் வலியால் மிகவும் அவதிப்பட்டேன். எப்படா படத்தின் சூட்டிங் முடியும் என்று இருந்தது. கோடி, கோடியாக கொடுத்தாலும் இனிமேல் இதுபோன்ற கேரக்டரில் நடிக்க கூடாது என்று முடிவெடுத்திருக்கிறேன்.
பொதுவாக பாலா, அவ்வளவு சீக்கிரத்தில் யாரையும் பாராட்ட மாட்டார். ஆனால் இந்தபடத்தில் ஒரு காட்சியில் நான் 70 அடி உயர மரத்தில் இருந்து குதிப்பது போன்று ஒரு காட்சி. இந்தகாட்சியில் யாருடைய துணையும் இன்றி நானே தைரியமாக நடித்தேன். இந்தகாட்சியை படமாக்கிய பின்னர், அதை பார்த்த பாலா கலங்கிவிட்டார். எப்படி நடிச்ச…?என்று என் முதுகில் ‌தட்டிக் கொடுத்தார். உனக்கு நிச்சயம் நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று கூறினார்.
இந்தபடம் முழுக்க மாறு கண்ணுடன் நடித்துள்ளேன். இதுவரை யாரும் இப்படி ஒரு கேரக்டரில் நடித்தது இல்லை. ஆகையால் இதனை கின்னஸ் சாதனைக்கு அனுப்ப முயற்சிகள் நடந்து வருகிறது. படத்தில் நடிக்க நிறைய சிரமப்பட்டாலும், நிச்சயம் இந்தபடம் எனக்கு விருது வாங்கி தரும் படமாக இருக்கும். அப்படி எனக்கு கிடைத்தால் அந்த பெருமை ஆர்யாவையே சாரும். காரணம் இந்தபடத்தில் என்னை நடிக்க வைத்தது அவன் தான். எனக்கும், அவனுக்கும் இடையிலான நட்பு, 16 வருட நட்பு. அவன் ஒரு அதிசியப்பிறவி. அவனுக்கு கர்வம், போட்டி, பொறாமை போன்றவை எதுவும், கிடையாது. சில காட்சிகளில் எனக்கும் பெயர் கிடைக்கும் என்பது அவனுகே தெரியும், ஆனாலும் அவன் பொறாமைப்படவில்லை.
தற்போது பிரபுதேவாவின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறேன். திருமணத்திற்கு இப்போது அவசரம் வேண்டாம் என நினைக்கிறேன். இன்னும் இரண்டு ஆண்டுகள் கழித்து செய்யலாம் என்று எண்ணியிருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment